Pages

Sunday, January 29, 2012

நாடகம் "நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்"


                              
சமையலுக்கு காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தார் மாணிக்கம் ,

அப்பா இதோட பீடி காசு 25 ரூபா தரணுமாம் செட்டியார் சொல்ல சொன்னார், என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தான் மாணிக்கத்தின் மகன் சுரேஷ்.

 சரிடா , பீடி எங்கே ?

               இந்தாப்பா ,,,

(பீடியை வாங்கிவிட்டு), சுரேஷ் அம்மா போட்டோவை துடைச்சு விளக்கு போட்டுட்டு போய் படிடா , அப்பா சாப்பாடு செஞ்சுட்டு கூப்பிடுறேன்..

              சரிப்பா ,,

ஒரு பீடியை பற்ற வைத்து புகைத்தவாரே சமையல்  வேலைகளில்   ஐக்கியமானார் மாணிக்கம்.

            அப்பா அம்மா போட்டோவுக்கு விளக்கு வச்சிட்டேன் ..

              சரி போய் படி..

            அப்பா இன்னொன்னு சொல்லணும்

              என்ன ?

        நாளானிக்கு ஸ்கூல் சார்பா நம்ம ஊர் கோயில் திடல்ல ஒரு நாடகம் போடறாங்க , அதுல நானும் நடிக்கிறேன்பா, சரவணன் வாத்தியார் தான் அதுல எனக்கு அப்பாவா நடிக்கிறார் பா,,

சிறிது நேரம் யோசித்தவராய், நல்லா நடிக்கணும் டா என்று மட்டும் கூறினார்

அடுத்தநாள் சுரேஷை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார் மாணிக்கம் போகும் வழியில் செட்டியார் கடையில் நின்றார்.

செட்டியாரே ஒரு கட்டு பீடி கொடுப்பா,,,,,

 நேத்து சாயங்காலம் தான்யா உன் பையன்கிட்ட ஒரு கட்டு பீடி கொடுத்து விட்டேன் அதுக்குள தீத்துட்டியா ?

கண்ணு வைக்கதையா, பீடிய கொடு

நீ இன்னும் பழைய பாக்கியே 25 ரூபா தரனும்யா !  

25 ரூபாலாம் ஒரு காசாயா ? என் பையன் சிங்கக்குட்டி நாளைக்கு நாடகத்தில நடிக்க போராம்யா பாரு ஒரு நாள் அவன் எம்.ஜி.ஆர் மாதிரி பெரிய ஆளா வருவான் அன்னைக்கு உன் கடையையே விலைக்கு வாங்குவான் !!

செட்டியார் சிரித்துக்கொண்டே , இந்தா பீடி இதோட 30 ரூபா ஆச்சு இந்த காச மொதல கூடு என்கடைய அப்பறம் விலைக்கு வாங்கலாம் ,

தரேன் செட்டியாரே தரேன் என்றவாறே ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டு இடத்தை காலி செய்தார் மாணிக்கம்.

ஒரு வழியாக நாடகம் நடக்கும் நாள் வந்தது , ஊர் மக்கள் அனைவரும் கோயில் திடலில் கூடியிருந்தனர்.

மேடையை பார்த்தவாரே அமர்ந்து இருந்தார் மாணிக்கம் ,

நாடகத்தில் நடிப்பவர்களெல்லாம் மேடைஏறினர் , சுரேஷின் ஆசிரியர்கள், சுரேஷ் மற்றும் சிலர் அங்கு இருந்தனர் , சுரேஷ் யாரையோ தேடிக்கொண்டிருந்தான் மாணிக்கத்தை கண்டவுடன் 100 வாட்ஸ் பல்பு போல புன்னகைத்தான், கைகளால் சைகை காண்பித்தான் .

மாணிக்கத்திற்கு பெருமை தாளவில்லை ,அருகில் இருப்பவர்களிடம் அது என் பையன் தாங்க தோ அந்த வெள்ளை சட்டை என்று கூறிக்கொண்டிருந்தார் ,வேக வேகமாக ஜேப்பில் கையை விட்டு ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தார் வானத்தை நோக்கி ரயில் புகை போக்கி போல புகை விட்டார் , தன்னை மறந்து விசில் அடித்தார் ,

நாடகத்தில்  (அந்த காட்சியில்)

   சுரேஷின் அப்பா புற்று நோயால் இறந்து விடுகிறார் , அவரை கட்டிபிடித்து சுரேஷ் அழுது கொண்டு இருக்கிறான் .
புகை பிடிப்பது , புகையிலை போடுவது , மது அருந்துவதால் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள் என ஆசிரியர் ஒருவர் விளக்கி கொண்டிருந்தார்.        

சுரேஷ் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான் , ( சரியான சிகிச்சை மூலம் புற்று நோயை ஆரம்பத்திலே குணப்படுத்திவிடலாம் என ஆசிரியர் கூறிக்கொண்டிருந்தார்)

நாடகம் முடிந்தவுடன்

வேகமாக ஓடி வந்த சுரேஷ் மாணிக்கத்தை கட்டியனைத்துக்கொண்டு கதறுகிறான் ,

அழுவாதடா ,, ஏன் அழுவுற ?

புகை பிடிச்சா புற்றுநோய் வரும்னு வாத்தியார் சொன்னார்ல அப்ப நீ என்ன விட்டிட்டு போய்டுவியாப்பா ?

தொண்டை அடைத்துக்கொண்டது மாணிக்கத்திற்கு , கண்கள் குளமாகின , கைகள் லேசாக நடுங்கியது, சுரேஷை தூக்கி தோள் மேல் போட்டுக்கொண்டு நடந்தார் ..

போகும் வழியில் செட்டியாரின் கடையை பார்த்தார் .

செட்டியாரே இந்தா 30 ரூபா என கடைக்குள் பணத்தை வைத்தார் .

மாணிக்கம் பீடி வேணாமா ? என்ற கேள்விக்கு மவுனமாய் கடையை கடந்தார் மாணிக்கம் ,,,
                                                       சூர்யபிரகாஷ்.பெ
           

Thursday, January 19, 2012

பசுமை பயணம்

     பதிவுலக நட்புகளே இந்த புதிய வருடத்தில் புது பொலிவுடன் நாங்கள் ஒரு செயலில் இறங்கியுள்ளோம் , 

      சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எங்களது ஈஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பசுமைவிடியல் என்ற பெயரில் ஒரு இயக்கம்  ஏற்படுத்தியுள்ளோம் . சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களால்  இம்மாத முதல் வாரத்தில் குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸில் வைத்து பதிவர்கள் முன்னிலையில் இவ்வியக்கத்தின் இணைய தளம் தொடங்கி வைக்கபட்டது.     முதல் களப்பணியாக மரம் நடுதல், விழிப்புணர்வுக்கான முதல் மரக்கன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார். இனி இதர பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன...பசுமை விடியல் - ஒரு அறிமுகம்


     பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும்.


ஆனால்...


    மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...


      2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!


      உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான் இருக்கின்றன...!

     மக்களை பற்றி நாடு அக்கறை கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?! அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டு செயல் படுத்தபட வேண்டும்...!

      இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!

     கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களை கோர்த்து இருக்கிறோம்...!

இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!

     ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!
பதிவுலக உறவுகளே !


     உங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களை இன்னும் சிறப்பாக வழிநடுத்தும் என்பதால் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்கிறேன். மேலும் உங்களின் மேலான ஒத்துழைப்பும்,வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் இருக்க வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றேன்.


     இனி தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்...........அவசியம் செல்லவும். உங்களின் வருகைக்காக அங்கே காத்திருக்கிறோம்.பிரியங்களுடன்
சூர்ய பிரகாஷ். பெ 

Tuesday, January 3, 2012

விளையாட்டு


அதீதம் இணைய இதழில் வெளியான சிறுகதை (எமது சொந்த படைப்பு)

டேய் யாருடா ராணி?


வினோத்தும் ரமேசும் என பதில் வந்த பின், சரவணன் அடித்த கோலியின் வேகத்தில் இரண்டாய் பிளக்கிறது வினோத்தின் கோலி.


டேய் நீ பெரிய கோலி வச்சுக்கிட்டு சின்னதா இருந்தா உடைக்கிறியா? இரு இரு நான் ஊருல இருந்து வரும் போது நாலு பெரிய கோலி வாங்கிட்டு வரேன். அப்புறம் பாரு என்று வினோத் சீறினான்.


ஊருக்கா ? எந்த ஊருடா?


மெட்ராஸ் டா. எங்க அத்த ஊர்ல இருந்து வந்துருக்கு. இன்னிக்கு ராத்திரி நாங்க ரயில்ல போறோமே. அப்புறம் ஆனந்த் இருக்கான் அவன் கூட நிறைய விளையாடுவேனே! அப்புறம் பீச்சுக்கு போவேனே !. இன்னும் நிறைய இருக்கு தெரியுமா?


முடித்து விட்டு ஒரே மூச்சில் வீட்டுக்கு வந்த வினோத் அத்தையை காணாமல்,


அம்மா, அம்மா


என்னடா?


அத்த எங்க?


ஊருக்கு போயிட்டாங்கடா.


ம் போ, நீ பொய் சொல்ற. சொல்லும் போதே வெளியிலிருந்து வந்த அத்தை,


உன்ன விட்டுட்டு போவேனா மருமகனே ? துணியெல்லாம் எடுத்து வச்சுக்க சாப்பிட்ட பிறகு போலாம்.

ம்ம்ம் சரி ....

அம்மா எனக்கு தீபாவளி க்கு எடுத்த பேன்ட் சட்ட எடுத்து வைமா . அப்புறம் அந்த நோட் வேணும் ,,

எதுக்கு டா நோட் ?

ரப் நோட் மா

அதான் எதுக்கு ?


அது அங்க பெரிய கடல் இருக்குல்ல , அதான் கப்பல் செஞ்சு விட்டு விளையாடலாம்னு தான் . இங்க ஊர்ல மழை பேஞ்சா தான் விட முடியுது.


ஹா ஹா ஹா, அடப்பாவி சரி சரி நிறைய கப்பல் விடு. என்று சிரித்துக் கொண்டே காபி போட போனாள் அம்மா .


தீபாவளிக்கு எடுத்த சட்டை, பேண்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு கிளம்பிய பயணம், ஆறு மணிக்கு அத்தை ரயில் நிலையத்தில் எழுப்பிய போது முடிந்தது.


மாமாவின் காரில் ஏறி அவ்வளவு காலையிலும் அவசரமாய் இந்த மக்கள் எங்கு செல்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டு இருந்த போதே வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.ஆனந்த் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.


நீ தூங்குறதுன்னா தூங்கு வினோத் அப்புறம் அத்த எழுப்பி விடறேன்.


இல்ல அத்த ஆறு மணிக்கு மேல தூக்கம் வராது எனக்கு.


சரி போயிட்டு குளிச்சுட்டு வா,

அதை கவனிக்காதவாறு வேகமாக மாடிக்கு ஓடினான் வினோத்
மெட்ராஸ் பெரியதாய் இருந்தது மிகவும் பெரியதாய் , வானுயர்ந்த கட்டிடங்கள் , நிறைய பஸ் கள் , வாகனகள் என அனைத்தும் வினோத்தை கவர்ந்ததது.

வினோத் இந்தா டீ குடி , கீழ ஆனந்த் வீடியோ கேம் வச்சிருப்பன் போய் விளையாடுங்க

சரி அத்த ,,


“இரண்டு நாளாய் என்னடா வெறும் வீடியோ கேம் விளையாடுற? வாடா வெளிய போயி பசங்க கூட, கோலி விளையாடலாம்” என்று வினோத் அலுத்துக் கொள்ள


கோலியா அப்டின்னா? என ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆனந்த்.


அடப்பாவி கோலி குண்டு தெரியாதா? ஒரு கோலிய இன்னொன்னு வச்சு குறிபார்த்து அடிப்பாங்க.


ஓ அதுவா? அதெல்லாம் விளையாண்டதே இல்லை.


டேய் அப்போ பம்பரம்.கபடி,கண்ணாமூச்சி, ஓடிப் பிடிக்கிறது எல்லாம்?


டேய் இதென்ன பட்டிக்காடா ? இங்க கிரவுண்ட் ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு. அதுலயும் கிரிக்கெட் தான் விளையாடுவாங்க. அதுக்கே அடி பட்டுடும்னு சொல்லித்தான் அம்மா அனுப்பறது இல்லை.


அப்போ உன் கூட்டாளிங்க?


ஹா ஹா ஹா ,அது யாரு கூட்டாளி?


உன் ஃபிரண்ட்ஸ்?


எல்லாம் ஸ்கூல்ல தான் என கூறிவிட்டு வீடியோ கேம் பக்கம் கவனத்தை திருப்பினான் ஆனந்த்.


அடுத்த நாலு நாட்களும் அப்படியே போக. அடிக்கடி மாடிக்கு வந்து வானை நோக்கி பறக்கும் பட்டங்களை பார்த்துக் கொண்டிருந்தான் வினோத்,இப்பொழுது அவன் கண்களுக்கு அனைத்தும் வெறும் இயந்திரமாய் தோன்றின , வானுயர்ந்த கட்டிடங்கள் , நிறைய பஸ் கள் , வாகனகள் ,அனைத்தும் அலுப்பு தட்டின .


அன்று மாலை மேலே வந்த அத்தை,


டேய் இங்க என்னடா பண்ற? போயிட்டு டி‌வி பாக்க வேண்டியது தானே?


இல்லை அத்த, டிவில ஒண்ணுமே இல்லை.


சரி சரி. இரு துணியெல்லாம் அத்த காயபோட்டுட்டு வரேன்.


அத்த ....


சொல்லுடா ....


ஊருக்கு எப்போ போலாம்?


அடுத்த வாரம் போலாம்டா அதுக்குள்ள என்ன அவசரம்? கடல்ல கப்பல் விடலியா?


இல்ல அத்த, போயிட்டு அடுத்து எட்டாவதுக்கு நோட்ஸ் எல்லாம் பசங்ககிட்ட கேட்டு வாங்கணும். லேட்டா வாங்குனா நல்லது கிடைக்காது.


ம் ம் சரி. நாளன்னிக்கு மாமா மதுரை போறார்ல அவர் கூட போலாம் சரியா?


அப்படியே நாட்கள் ஓடின , கடைசியாக மாமாவுடன் வீடு திரும்பினான் வினோத் ...

ஊருக்கு வந்த அடுத்த நிமிடம் பழைய கோலி இரண்டை எடுத்துக் கொண்டு ஓடினான் வினோத்.


நல விசாரிப்பு எல்லாம் முடிந்த பின், புது துணி இருக்கும்மா அத எடுத்து வச்சுடு, நான் மதுரை கிளம்பறேன் என்று வினோத்தின் மாமா விடை பெற்றார்.

துணியெல்லாம் எடுத்து வைக்கும் போது அந்த பையிலிருந்து ஒரு நோட் விழுந்தது !
ஒரு பக்கம் கூட கிழிக்க படாமல் !